பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில், பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று சேராததால், அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
மேற்கு வங்கம், திரிபுராவை தவிர்த்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களில், அரசு பணியாளர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம், 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்கள் பங்களிப்பு அடிப்படையில், அவர்கள் சம்பளத் தொகையில் இருந்து, குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்விற்குப் பின், பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தை, தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு, 2003 ஏப்ரல் முதல், முன் தேதியிட்டு அமல்படுத்தியது. இத்திட்டத்தை அமல்படுத்தியது முதலே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குழப்பம்:
இருப்பினும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை மாற்ற, தமிழக அரசு முன்வரவில்லை. அதே நேரம், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமும் இதுவரை தீரவில்லை. அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, மத்திய அரசிடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கான முகப்பு எண் தரப்பட்டு, பிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாய் எங்கு எங்கு முதலீடு ஆகிறது என்பது தெரியவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 2,000 பேர் ஓய்வு பெற்று விட்டனர்; 1,000 பேர் இறந்து விட்டனர். இவர்கள், குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்க வில்லை. இதனால், அவர்கள் அவர்கள் அதிருப்தியில் உள்ளதுடன், பணியில் உள்ளவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.
அரசு ஊழியர் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ''புதிய ஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது என, தமிழக அரசு கூறுகிறது; தமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,'' என்றார்.
பணம் மாயம்:
இதற்கிடையில், பணியில் உள்ளோருக்கு, பிடித்தம் செய்யப்படும் பணமும் முறையாக பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பி உள்ளது. தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, சமீபத்தில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரையிலான, ஓய்வூதிய திட்ட பிடித்தம் தொடர்பான பட்டியல் வந்தது. இதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், பெரும்பாலானவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு மேல், 'மிஸ்சிங் கிரெடிட்' என, பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம், கணக்கில் வரவில்லையே என விரக்தி அடைந்தனர்.
ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக் கொடை கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது பிடித்தம் செய்யப்படும் பணமும் கணக்கில் வரவில்லை; எனவே, அதற்கான பட்டியலை எடுத்து, கருவூலத்தில் கேட்க முடிவெடுத்துள்ளோம். - அரசு ஊழியர்
No comments:
Post a Comment