கல்வி திட்டத்தில் புதுமையை ஏற்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்தவும், மாணவர்கள் படிக்கும் சூழலை மாற்றும் வகையில் தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகளை உருவாக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.
அதன்படி, அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்க, பரிசீலனை நடந்து வருகிறது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் துவக்கமாக, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மனித வள அமைப்புகளிடம் இருந்து ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட 411 ஆய்வுகளில் இருந்து, 211 ஆய்வுகள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை சமர்ப்பித்த கல்வி ஆய்வாளர்களை நேரில் அழைத்து, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் சென்னையில் தேசிய அளவிலான கருத்தரங்கம், விரைவில் நடத்தப்பட உள்ளது. அதில் பெறப்படும் முக்கிய ஆலோசனை மற்றும் கருத்துகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசின் ஒப்புதலுக்குபின், பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறை உருவாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நகர பகுதிகளை பொறுத்தவரை, பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி ஓரளவு உள்ளது; கிராமப்புற பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத அவலம் நீடிக்கிறது. அரசு பள்ளிகளில் போதிய வசதி ஏற்படுத்திய பின்பே, "ஸ்மார்ட்' வகுப்பறை திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment