பிஎப் ஓய்வூதியம் பெற்றுவருபவர்களுக்கு, ‘டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்’ என்ற புதிய சேவையை பிஎப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக வடக்கு டெல்லி மற்றும் சண்டிகரில் சோதனை அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இபிஎப்ஓ) அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது, ஓய்வூதியம் பெற்றுவருபவர்கள் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம், ‘உயிர் சான்று’ கொடுக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு மாற்றாக, ‘டிஜிட்டல் லைப் சர்டிபிக்கேட்’ என்ற சேவை கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி, ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கான பென்ஷன் ஆர்டர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பிஎப் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இப்படி பதிவு செய்த பிறகு ஓய்வூதியதாரர்கள் தங்களது செல்போன் மூலம் டிஜிட்டல் லைப் சர்பிடிக்கேட்டை சமர்ப்பிக்க முடியும். இந்த சேவை சோதனை அடிப்படையில் வடக்கு டெல்லி மற்றும் சண்டிகரில் கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. அங்குள்ள இரண்டு பிஎப் மண்டல அலுவலகத்திலும் ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மேற்படி ஆவணங்களை பெற்று பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த சேவையை ஆய்வு செய்த பிறகு நாடுமுழுவதும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 47 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎப் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்’ என்றார்.
No comments:
Post a Comment