தமிழகம் முழுவதும் குரூப் 2 பிரதானத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 8 மாவட்டங்களில் 44 மையங்களில் நடைபெற்ற தேர்வை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் மட்டும் 12 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 1,264 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இணையதளம் மூலம் தேர்வு:
குரூப் 2 பிரதானத் தேர்வு, முதல் முறையாக இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை தேர்வாணையத் தலைவர் பாலசுப்பிரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதன்பின், தேர்வாணையத் தலைவர் கூறுகையில், ""வரும் தேர்வுகளையும் இணையதளம் மூலமே நடத்த ஏற்பாடு செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.,) கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு மாதத்துக்குள் முடிவு வெளியாகும்'' என்றார்.
இணையதளக் கோளாறு: சில இடங்களில் இணையதளக் கோளாறு காரணமாக, தேர்வு நிறுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 300 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 270 பேர் தேர்வு எழுதினர். இணையதளக் கோளாறு காரணமாக 42 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அவர்களால் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 42 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதே இடத்தில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்வாணையத் தலைவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment