தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
மனுவில், தமிழகத்தில் 1442 பெண்கள் பள்ளிகளிலும், 4278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை. 2080 பள்ளிகளில் கழிப்பறைகள் பயனற்றதாக உள்ளன. மாணவர்கள் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்றுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கல்வித்துறை இணைய தளத்தில், 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்றும் அதில் மாணவர்கள் படிக்கும் 4060 பள்ளிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை நிறைவேற்றுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 2012-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகளை ஏற்படுத்திடவும் அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்கவும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தனபாலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கழிப்பறைகள் ஏற்படுத்தி, அவற்றை பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான தகவல்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட வேண்டும். 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment