இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 29, 2014

புத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்? துவக்கப்பள்ளி ஆசிரியைகள் குமுறல்

துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 'பாடம் சொல்லிக் கொடுக்கும் நாங்கள், லோடு மேன்களா?' என, துவக்கப்பள்ளி ஆசிரியைகள் ஆதங்கப்படுகின்றனர். தமிழக அரசு, துவக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை, புத்தகம், நோட்டு, பை, செருப்பு, வண்ண பென்சில் டப்பா உட்பட பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது.

மாநிலத்தில், 23 ஆயிரம் துவக்கப் பள்ளி கள் உள்ளன. இதில், 17 ஆயிரம் பள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகள். அரசு கொடுக்கும் இலவச பொருட்கள் நேரடியாக, இப்பள்ளிகளை சென்றடைவதில்லை. மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட குடோனில், இலவச பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் இருந்து, பல கி.மீ., தூரம் பயணம் செய்து, குடோனில் இருக்கும் பொருட்களை எடுத்து வருகின்றனர். மொத்தமுள்ள, 1.25 லட்சம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களில், 75 சதவீதத்தினர் ஆசிரியைகள். இவர்கள், இலவச பொருட்களை கொண்டு செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியதாவது:

ஓராண்டில், மூன்று பள்ளி பருவங்கள் வருகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும், ஒவ்வொரு பொருளாக அரசு தருகிறது. புத்தக பை, காலணியை மட்டுமே, ஆண்டிற்கு, ஒரு முறை தருகிறது. மற்ற பொருட்களான புத்தகம், நோட்டு போன்றவற்றை, கொஞ்சம் கொஞ்சமாக தருகிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது ஈராசிரியர் பள்ளிகள் மட்டுமே. ஒரு ஆசிரியர் சென்று விட்டால், மற்றொரு ஆசிரியர் பாடம் நடத்த முடியாது. மாணவர்களை ஒழுங்குபடுத்தவே நேரம் சரியாக இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, சத்துணவு திட்டத்தை போன்று, இலவச பொருட்களை, பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டும். பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட தேதியை குறிப்பிட்டு, அந்த தேதியில், இலவச பொருட்களை ஒட்டுமொத்தமாக கொடுத்து விட்டால், பாடம் நடத்துவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவர்.

நாங்கள் என்ன, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும், 'லோடு மேன்'களா? இவ்வாறு, அவர் கூறினார். தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கு, இலவச பொருட்கள் தயாரிப்புக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, பொருட்கள் வினியோகம் நடக்கிறது. ஒவ்வொரு பொருள் தயாரிப்புக்கும் கால அளவு மாறுபடுகிறது. முதலில் எந்த பொருள் வருகிறதோ, அதை தாமதிக்காமல், மாணவர்களுக்கு சேர்க்க வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். எல்லா பொருட்களையும் ஒட்டுமொத்தமாக தயாரித்து, ஒரே நேரத்தில் கொடுப்பதற்கு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வரும் ஆண்டில் இது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment