புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து 2009 க்கு பின் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தொடக்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற மற்றும் உயிரிழந்த, 79 ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 247 ஆசிரியர்களுக்கும் பணப்பலன் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞர் ஜெபஜேம்ஸ் கூறியதாவது: பொதுநல நோக்கத்துடன் தகவல்களை கேட்டு பெற்றேன். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணப்பலன் கொடுப்பது தொடர்பாக எந்த அரசு உத்தரவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த பணத்தை கூட வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment