பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்பில், பொதுவாக மாணவர்களை, அதிகளவில் தோல்வி அடைய செய்வதில்லை. வருகைப் பதிவேடு மற்றும் பாடங்களில், ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தால், 'பாஸ்' போட்டு விடுகின்றனர். இந்த நிலை, அரசு பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளிகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், பாடத்திற்கு, 40; 50; 60 மதிப்பெண் என, நிர்ணயித்து, மாணவர்களை, அதிகளவில், தோல்வி அடையச் செய்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலத்திற்கு வந்துள்ளது. பிளஸ் 1 வகுப்பில், மாணவர் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் வகையில், பள்ளி கல்வித்துறை, எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை.
மாறாக, அந்தந்த பள்ளி ஆசிரியர் குழுவே, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சியில் குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பிலேயே, வடிகட்டுவது, தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர், முத்தரசன், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் மூலம், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் வெவ்வேறு வகையான மதிப்பெண் நிலவரத்தை அறிந்துள்ளார். அவர் கூறியதாவது:
சென்னை, ஷெனாய் நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2012 13ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, ஆங்கிலம், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு, தலா , 10 மதிப்பெண் நிர்ணயித்துள்ளனர். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களுக்கு, 15 மதிப்பெண் என, நிர்ணயித்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், தலா, 40 மதிப்பெண் என்றும், வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில், தலா, 60 மதிப்பெண் என்றும் நிர்ணயித்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 மதிப்பெண் முதல், 15 மதிப்பெண் வரை தான் உள்ளது. உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 40 மதிப்பெண், 60 மதிப்பெண் என, நிர்ணயிப்பது, எந்த வகையில் நியாயம். உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களை, அதிகளவில், 'பெயில்' ஆக்குகின்றனர்.
கல்வித்துறை, அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஒரே வகை மதிப்பெண்ணை, தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, முத்தரசன் கூறினார். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'இந்த பிரச்னையை, செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் சரி செய்யப்படும். அனைத்து வகை பள்ளிகளுக்கும், பிளஸ் 1 தேர்ச்சிக்கு, சரிசமமான மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும்' என, தெரிவித்தது.
No comments:
Post a Comment