பாரத சுகாதார திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 163 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்ட 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பாரத சுகாதார திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், ஊரக முகமை அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு பள்ளிகளாக ஆய்வு செய்து, தேவையான இடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய நான்கு குழுக்குள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 1,300 பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்தனர். அதில் பல பள்ளிகளில் ஒரே வளாகத்தில் கட்டியுள்ள கழிப்பறையில் நடுவில் தடுப்பு சுவர் அமைத்து ஒரு பகுதியை மாணவிகளும், மறு பகுதியை மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். நான்கு குழுவின் ஆய்வு முடிவில் மாவட்டத்தில் 163 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனியாக கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 163 பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்டுவதற்காக ஊரக முகமை நிதியிலிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் வீதம் 57 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி விரைவில் கட்டுமானப் பணி துவங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிக் கழிவறைகளை பராமரிக்க ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், கூடுதலாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment