பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பரிசு வழங்குகிறார். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் மாநில அளவில் மூன்று இடங்களில் 4 மாணவ, மாணவியர் இடம்பெற்றனர். முதலிடத்தில் எஸ்.சுஷாந்தி என்ற மாணவியும், இரண்டாவது இடத்தில் ஏ.எல்.அலமேலு என்ற மாணவியும், மூன்றாவது இடத்தில் டி.துளசிராஜன், எஸ்.நித்யா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் மாநில அளவில் முதலிடத்தில் 19 பேரும், இரண்டாம் இடத்தில் 125 பேரும், மூன்றாவது இடத்தில் 321 பேரும் இடம்பெற்றனர். முதல் மூன்று இடங்களில் 465 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நேரில் பரிசுகளை வழங்குகிறார். இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களோடு, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் முதல்வர் நேரில் பரிசுகளை வழங்குவார் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment