ஆண்டு முழுவதும் நடத்த உள்ள போட்டி தேர்வுகளுக்கான, உத்தேச அட்டவணையை தயாரித்து வெளியிட, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முன் வராதது ஏன்?' என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., தலைவராக, நடராஜ் பதவி ஏற்றதும், தேர்வாணையத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்ததுடன், ஆண்டு முழுவதற்குமான அட்டவணையையும் வெளியிட்டார். அரசு துறைகளில் இருந்து, முன்கூட்டியே, காலி பணியிடங்களை பெற்று, அதை நிரப்பிட, எந்தெந்த மாதங்களில், எந்தெந்த தேர்வு நடக்கும்; அதன் முடிவு எப்போது வெளிவரும்; பணி நியமனத்திற்கான கலந்தாய்வு உட்பட, அனைத்து தகவல்களையும் தொகுத்து வெளியிட்டார்.
அட்டவணைப்படி, தேர்வுகளை நடத்தவும், நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது, அனைத்தும் ஓரங்கட்டி வைக்கப்பட்டு விட்டது. இதற்கு, அங்குள்ள ஒரு சிலரிடையே நடக்கும் பனிப்போர் தான் காரணம் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைவர், ஒரு பணியை செய்ய ஆர்வமாக இருந்தாலும், அதற்கு, அங்கே இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுகின்றனர் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்வு அட்டவணையை, முன்கூட்டியே வெளியிட்டால், அதற்கேற்ப, தேர்வர்கள், தேர்வுக்கு தயாராக முடியும். நடராஜ் அறிமுகப்படுத்திய நல்ல திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த, தற்போதைய தலைவர் முன்வர வேண்டும் என, போட்டி தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment