30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வு வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பதிவுத்துறை மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிற இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்று தமிழக அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய தேர்வாக குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. போட்டிக்கு காரணம் இதில் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், அதேபோல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சேருபவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றுவிடலாம்.
யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வுசெய்யப்படும் அனைவருக்கும் சொந்த மாநிலத்திலேயே பணி (ஹோம் ஸ்டேட் கேடர்) கிடைத்துவிடுவதில்லை. ஆனால், குரூப்-1 தேர்வு மூலமாக இந்த பணிகளுக்கு வருபவர்கள் தமிழ்நாட்டிலேயே பணியை தொடரலாம். இதனால், குரூப்-1 தேர்வு எழுவதுவதற்கு தமிழக இளைஞர்கள் மத்தியில் பலத்த போட்டியிருக்கும். யு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு கைகொடுப்பது குரூப்-1 தேர்வுதான். 100 காலியிடங்கள் குரூப்-1 பதவிகளில் 2012-ம் ஆண்டுக்கான 25 காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக்டோபர் மாதம் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2013-ம் ஆண்டுக்கான 100 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த காலியிடங்களில், 33 துணை ஆட்சியர், 33 துணை கண்காணிப்பாளர் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) பதவியில் மட்டும் காலியிடம் ஏதும் இல்லை. வணிகவரி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட இதர பணிகளில் காலியிடங்கள் வரப்பெற்றுள்ளதாகவும் பணியாளர் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment