தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக (எஸ்.எஸ்.ஏ.,) மத்திய அரசு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தில், 2002 முதல் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நடப்புக் கல்வியாண்டில், இத்திட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பொது கழிப்பறைகள் கட்டுதல், மாணவிகளுக்கு தனிக் கழிப்பறைகள், பள்ளிகளில் குடிநீர் வசதிகள் மேற்கொள்ள ரூ.44.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடிவுயும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் போதிய கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை மேம்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் மேலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்க, மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு சிறப்பு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு நடப்புக் கல்வியாண்டில் 2வது முறையாக ரூ.136 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்ட உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி வருகிறது. கல்வித் துறை செயலர் சபிதா, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி ஆகியோரின் முயற்சியால், நடப்புக் கல்வியாண்டில், 2வது முறையாக ரூ.136 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஊனமுற்ற மாணவர்களுக்கான கழிப்பறைகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், தற்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment