சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ. 15 அதிகரிக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் விநியோக கட்டணத்தை திருத்தியமைத்துக்கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்கான கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இந்த கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றே சிலிண்டர் கட்டணத்தில் 15 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் வருகிற டிசம்பர் மத்தியில் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலாண்டுக்கு ஒருமுறை உயர்வு
இதுதவிர மாதாமாதம் உயர்த்தப்படும் டீசல் விலையால், சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பதன் காரணமாக, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை சிலிண்டர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணத்தை இனி எண்ணெய் நிறுவனங்கள் தாங்களாகவே திருத்தியமைத்துக்கொள்வதற்கான உரிமையை வழங்கவும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொள்கை அளவில் நாங்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறோம். அதே சமயம் இதற்கு அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதல் தேவையா என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்" என்றார்.
இதுவரை பெட்ரோல், டீசல் விலையை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இனி சமையல் எரிவாயு சிலிண்டரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment