அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளின் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பதவி உயர்வு விரைந்து கிடைக்காமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது
. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு ஊழியர்களுக்காக துறைத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது. மே மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். தேர்வுகளின் முடிவுகள் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு விடும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படும். இந்த வெளியீட்டில் தேர்வு எழுதியவரின் பதிவெண், பெயர் மற்றும் அவரது வீட்டு முகவரி ஆகியன இடம்பெற்றிருக்கும். இந்த வெளியீட்டின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பணிப் பதிவேட்டில் (Service Record) தேர்ச்சி விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் கையெழுத்திடுவர். இந்தப் பதிவுகளின் அடிப்படையிலேயே பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்.
ஆறு மாதங்கள் கடந்தும்: கடந்த மே மாதம் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகள் குறித்த முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், தேர்வு முடிவுகளின் விவரங்கள் அனைத்தும் இன்றுவரை தேர்வாணைய வெளியீட்டில் வெளியிடப்படவில்லை. இதனால் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த மே மாதத்துக்கான தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், டிசம்பர் மாதத்துக்கான தேர்வினை நடத்துவதற்கான நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment