தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்ககான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள, 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், மே, 28ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. இதன்படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், ஆகஸ்ட், 12ம் தேதி வரை பெறப்பட்டன.
இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, 25ம் தேதி முதல், பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு, சென்னை, நந்தனம், அரசு ஆடவர் கலைக் கல்லூரி; காமராஜர் சாலையில் உள்ள, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்; அண்ணாசாலையில் உள்ள, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அழைப்புக் கடிதம், சுயவிவரப் படிவம், ஆளறி சான்று, சான்றிதழ் சரிபார்ப்பு படிவம் ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், பதிவேற்றப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள், அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும். அழைப்புக் கடிதம், விண்ணப்பத்தாரர்களுக்கு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ததன் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுகின்றனர். விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள், விளம்பரம் செய்யப்பட்ட நாளுக்கு முன் அதாவது, மே, 27ம் தேதிக்கு முன் பெற்ற தகுதியே, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment