வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க மாநிலப்பொதுச்செயலர் கூறியது:
வரும் 20,21 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20,21ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முழு அளவில் பங்கேற்க உள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். பொது வேலை நிறுத்தத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவும், மக்கள் விரோத கொள்கைகளை திரும்ப பெறவும், தன் பங்கேற்புத்திட்டத்தைக் கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை தொடரவும் வலியுறுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வை முற்றிலும் ரத்து செய்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத சந்தா தொகையை ரூ.50 ஆக குறைக்க வேண்டும் என்றார்.
மாநிலச் செயலாளர் வின்சென்ட், மாவட்டப் பொருளாளர் தமிழ்செழியன், மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ் ஆண்டனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment