குரூப் 2 மறு தேர்வுக்கான முடிவுகள் ஐந்து நாள்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 131 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 262 பேரில் ரேங்க் அடிப்படையில் வந்த 131 பேர் முதல்முறையாக கலந்தாய்வு அடிப்படையில் வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் நடராஜ் கூறியது: குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதில் ஒவ்வொருவரும் எந்தெந்தப் பணிகளில் சேர விருப்பமோ அதை தேர்ந்தெடுக்க உள்ளனர். வரும் 16-ம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வில் 25 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 26 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று தகவல்களைத் தெரிவிக்கலாம். தேர்வாணைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நட்ராஜ். வியாழக்கிழமை நடைபெற்ற கவுன்சலிங்கில் 40-க்கும் மேற்பட்டோர் துணை ஆட்சியர் பதவியையும், 23-க்கும் அதிகமானோர் டி.எஸ்.பி., பதவியையும் தேர்ந்தெடுத்தனர்.
குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வின் வினாத்தாள் முன்பே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு நவம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்னும் 5 நாள்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment