தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணையில் (11) கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 2001 கல்வியாண்டு முதல் தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதுபோல் 2010-11ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 218 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகள் 2012-2013-ஆம் கல்வியாண்டில் 6, 7, 8 வகுப்புகளுடன் முழுமை பெற்ற நடுநிலைப் பள்ளிகளாக இயங்குகின்றன. எனவே, 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.
அவ்வாறு நிலையுயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களிலிருந்தும், பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் பணியிடங்களிலிருந்தும் முன்னுரிமை பட்டியலின்படி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மூலமாக நிரப்பிக் கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment