வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், தகவல்களைத் திருத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 2 கோடியே 82 லட்சத்து 49ஆயிரத்து 651 ஆண்கள், 2 கோடியே 84 லட்சத்து 28 ஆயிரத்து 472 பெண்கள், 3 ஆயிரத்து 719 திருநங்கைகள் என 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. அதன் தகவல்களை இணையதளம். செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, தானியங்கி குரல் கேட்பு(ஐ.வி.ஆர்.எஸ்.) மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்து தரப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறுவது ஆகியவற்றுக்காக 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வரும் ஜனவரி 1- ஆம் தேதியன்று நிலவரப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்களும், ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் படிவம் 6 மூலமாக பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பித்தனர். EASY போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததால், மொத்தமுள்ள 22.81 லட்சம் விண்ணப்பதாரர்களில் 7 லட்சம் பேர் தங்கள் விண்ணப்பங்களில் செல்லிடப்பேசி எண்களை அளித்திருந்தனர்.
அந்த 7 லட்சம் பேருக்கும் அவர்களின் விண்ணப்பம் குறித்த தகவல்கள், செல்லிடப் பேசி குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் 4 கட்டங்களாக பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு கட்டத்துக்கும் விண்ணப்பம் வரும்போது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தரப்படும். அந்த வகையில் டேட்டா பதிவு, சரிபார்த்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலருக்கு விண்ணப்பத்தை அளித்தல், சரிபார்த்தல் பணி நிறைவு, விண்ணப்பத்தின் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி இறுதி உத்தரவு பிறப்பித்தல் ஆகிய 4 கட்டங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பம் கொடுக்கும்போது செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்காத பழைய வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அவர்களும் EASY செல்லிடப்பேசி செயலி, இணையதளம், ஐ.வி.ஆர்.எஸ் 044-66498949, குறுஞ்செய்தி வழியாக அனுப்புவோர் எஸ்.எம்.எஸ்., (ஆர்.எம்.என். -ஸ்பேஸ்- வாக்காளர் அடையாள அட்டை எண்- ஆகிய தகவலை 1950 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
நாளை முதல் நடவடிக்கை: வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மக்களே முன்வந்து கொடுப்பதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெயர் சேர்ப்புக்கான 6-ஆம் எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விவரங்கள் அடங்கிய சுருக்கப் பட்டியல் 9-ஆம் எண் படிவத்திலும், பெயரை நீக்க 7-ஆம் எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் 10-ஆம் எண் விண்ணப்பத்திலும், விவரங்களைத் திருத்துவதற்கான 8-ஆம் எண் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் அனைத்தும் 11-ம் எண் விண்ணப்பத்திலும், வாக்காளர் பட்டியல் பதிவை இடமாற்றுவதற்கான 8ஏ எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் விவரங்கள் அனைத்தும் 11ஏ எண் விண்ணப்பத்திலும் இடம்பெற்றிருக்கும். மேலும், http: 104.211.228.47ApptrackingEmatixGrid.aspx. என்ற இணையதள இணைப்பிலும் காணலாம். ஏதாவது திருத்தங்கள் செய்ய நேர்ந்தால், தகுந்த ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகலாம் என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment