ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120–லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது. இரண்டு அடுக்கு ஏ.சி. அல்லது முதல் வகுப்புக்கு ரூ.100–லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது.
பயணக்கட்டணம் பிடித்தம் இதைப்போல 3 அடுக்கு ஏ.சி., ஏ.சி.சி., 3ஏ வகுப்புகளுக்கு ரூ.90–லிருந்து ரூ.180 ஆக உயர்கிறது. மேலும் 2–ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.60–லிருந்து ரூ.120 ஆகவும், 2–ம் வகுப்பு பயணிகளுக்கு ரூ.30–லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யப்படும் பயணிகளுக்கு 25 சதவீத பயணக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதைப்போல 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு, 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கே கட்டணம் திருப்பியளிக்கப்படும்.
முன்பதிவு செய்யப்படாத 2–ம் வகுப்பை பொறுத்தவரை, ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்யும் போது ரூ.15 பிடித்தம் செய்யப்படுவதே வழக்கத்தில் இருந்தது. இது இன்று முதல் ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது. ஆர்.ஏ.சி. டிக்கெட் இதைப்போல காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்போர், ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பாக ரத்து செய்தால் கூட (பிடித்தம் போக) பணத்தை திரும்ப பெறலாம். அதற்கு பின் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது. இந்த புதிய விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால் ரெயில்வே பயணிகளின் மோசடிகள் குறைந்து உண்மைத்தன்மை ஊக்குவிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய நடைமுறை ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு அட்டவணை (சார்ட்) தயாரித்த பின்னும், முன்பதிவு செய்யும் முறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறைப்படி ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பிருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி ஒவ்வொரு ரெயிலும் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே வழக்கமான அட்டவணை தயாரிக்கப்படும். இதில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது முதல் இட ஒதுக்கீடு அட்டவணை என அழைக்கப்படும். மீண்டும் முன்பதிவு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னரும், அந்த ரெயிலில் இடம் இருந்தால் மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் இணையம் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி ரெயில் புறப்படுவதற்கு ½ மணி நேரத்துக்குமுன் நிறுத்தப்பட்டு, 2–வது இட ஒதுக்கீடு அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணை ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர் மூலம் வழங்கப்படும். இந்த புதிய வசதியால் ரெயில்கள் காலியாக செல்வது தவிர்க்கப்படுவதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment