பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது; ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம், 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில், நுாறு வினாத்தாள்களில், சிறந்த, 10 வினாத்தாள்கள் தேர்வு செய்யப்படும்; பின், அந்த, 10ல் இடம்பெற்றுள்ள, சிறந்த வினாக்களை மட்டும் எடுத்துச் சேர்த்து, இறுதி வினாத்தாள் தயாரிக்கப்படும்.இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய பாடத்திட்டத்தின், 'புளூ பிரின்ட்'டில் உள்ளது போல் தான் வினாத்தாள் இருக்கும். ஆனால், பாடங்களை புரிந்து படித்ததை உறுதி செய்ய உதவும் கேள்விகள்; படித்ததை விடையாக எழுதும் கேள்விகள்; பாடங்களின் அடிப்படையில், சிந்தித்து எழுதும் கேள்விகள் என, மூன்று வகைகளில் இருக்கும். புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் உள்ள கேள்விகள் மட்டுமின்றி, தற்போது, புதிய கேள்விகளும் கேட்கப்பட உள்ளன.
எனவே, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மாணவர்கள் படிக்க வேண்டும்; நிச்சயமாக, பாடங்களை தவிர்த்து எந்த கேள்வியும் இருக்காது. அதே நேரத்தில், பாடங்களின் அடிப்படையில் சிந்தித்து எழுதும் வகையிலான கேள்விகள், நிச்சயம் இடம்பெறும். இந்த முறையில் தான், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வினாத்தாளும் அமையும். அதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் அறிய முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏன் புரிந்து படிக்க வேணடும்? பல பள்ளிகளில், புளூ பிரின்ட்டில் உள்ளது போல், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் இரண்டு மதிப்பெண் வினாக்கள், இரண்டு கேட்கப்படும் என கூறப்பட்டிருந்தால், அதன்படி, இரண்டு மதிப்பெண் வினாக்களை மட்டுமே கற்றுக் கொடுத்து, பாடத்தின் மற்ற அம்சங்களை விட்டு விடுகின்றனர்.
அதேபோல் கேள்வியையும், அதற்கான புத்தக பதிலையும் புரிந்தோ, புரியாமலோ படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் திணறுகின்றனர். இதைத் தவிர்க்க, பள்ளி கல்வித்துறைக்கு, அண்ணா பல்கலையில் இருந்து பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. எனவே, பள்ளி கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் தடுமாறாமல் இருக்கவும்; பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறவும், இந்த வினாத்தாள் மாற்றம் உதவும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment