பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன.
அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில் தத்தளிக்கின்றனர்.இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன், தலைவர் தனபால் கூறியதாவது:
இது முற்றிலும் வருவாய்த்துறைக்கு உட்பட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் விவரப் பட்டியல், கல்வி உதவி தொகைக்கான வங்கி கணக்கு எண்கள், நலத்திட்ட விவரம் என பல்வேறு பதிவேற்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மூவகைச் சான்றிதழ் பணிகளை தாலுகா அலுவலகங்களில் செயல்படும் 'இ சேவை' மையங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment