அனைத்துப் பள்ளிகளிலும் வழிபாட்டுக் கூட்டத்தில் வாரத்தில் ஒரு நாள் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
சாலை பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால், அவர்கள் பெற்றோர், உறவினர் மட்டுமில்லாது சமூகத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்காக பள்ளிகளில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை விரும்புகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தில் ஒருநாள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் இந்த உறுதிமொழி எடுப்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவேன்.
ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன். எனது பெற்றோரும், ஓட்டுநர்களும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்துவேன். பேருந்தின் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன்' உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு உறுதிமொழிகள் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment