இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, October 09, 2015

வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்.24 வரை நீட்டிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு


வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி வருகிற 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: செப். 20-ஆம் தேதியும், அக். 4-ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. 11-ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடைபெறும். அன்றோடு நிறைவு பெற இருந்த, திருத்தப் பணிகள் இந்த மாதம் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 14 லட்சத்து 45 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பெயர் சேர்த்தலுக்காக 11 லட்சத்து 34 ஆயிரத்து 859 மனுக்களும், நீக்கலுக்காக 60 ஆயிரத்து 922 விண்ணப்பங்களும், திருத்தங்கள் செய்ய ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 285 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் விவரங்கள் இணைப்பு: 32 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் விவரங்கள் அனைத்தும் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனால், கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் திருப்பூருக்கு மாற்றலாகி வரும்போது, பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தால் ஏற்கெனவே இருக்கும் அவரது பெயர் தானாகவே நீக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 16 முதல் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் செயல்படும்: முற்றிலும் தவறுகள் இல்லாமல் பட்டியலைத் தயாரிக்கவும், இரட்டைப் பதிவு-இறந்த வாக்காளர் பெயர்களை நீக்கவும் தொழில்நுட்ப அடிப்படையிலான நான்கு புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு செயலி, தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளம் (www.elections.tn.gov.ineasy), செல்லிடப்பேசி குறுஞ்செய்தி (9444123456), குரல் அடிப்படையிலான தொலைபேசி (044-66498949) ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்களது அடிப்படை விவரங்களை உறுதி செய்யலாம்.

இவ்வாறாகப் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்படும். தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் அறிய முடியும். ஒவ்வொரு நடவடிக்கையும் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும். அதிகாரிகளுக்குள் இணையவழித் தொடர்பு: பெயர் சேர்ப்புக்கு வாக்குச் சாவடி அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமே பொறுப்பாவர். எனவே, அவர்களுக்குள் ஒரு தொடர்பு இணையவழியில் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, அனைத்து மனுக்களும் ஸ்கேன் செய்யப்படும். போன் செய்தால் விண்ணப்பம் தயார்: குரல் வழி தொலைபேசியைப் பயன்படுத்தும் போது, பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய விவரங்களை வரிசையாகத் தெரிவித்தால் போதும்.

இறுதியில் அந்த குரல் வழி தொலைபேசி அமைப்பே விண்ணப்பத்தை தயாரித்துக் கொள்ளும். பின்னர், செல்லிடப்பேசிக்கு வரும் இணையதள இணைப்பைக் கொண்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு அளிக்கலாம். பெயர் சேர்க்க வரும் மனுவை வாக்குச் சாவடி அலுவலர் கள ஆய்வு மேற்கொள்வார். அதற்கு முன்பாக விண்ணப்பதாரர் குறித்த பழைய விவரங்கள் அடங்கிய பட்டியலை அவர் தன்னுடன் கொண்டு செல்வார். விசாரணைக்கு பின் மனுவை ஏற்றுக் கொள்ளலாம் என ஆய்வில் இருந்தே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். இதனால், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்படும். 15 நாள்களில் தீர்க்கப்படும்: திருத்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மனுக்கள் 15 நாள்களுக்குள் தீர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைபாடுகள் அடங்கிய உத்தேசப் பட்டியல் தேர்தல் அலுவலர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அந்தக் குறைகள் சரி செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment