பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.
இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு, அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment