தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்வதற்கான புதிய நடைமுறையை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அரசுத் துறை சார்ந்த தகவல்கள், விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை வழங்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டு முறை மேல் முறையீடு செய்யலாம்.
இந்த நிலையில், இரண்டாவது முறை மேல்முறையீடு தாக்கல் செய்வது குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், புதிய வழிமுறைகளை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அதன் விவரம்: 2-ஆவது முறை மேல்முறையீட்டுக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பம் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டதாகவோ அல்லது தெளிவாகக் எழுதப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கையெழுத்திட வேண்டும். இது சட்டப் பூர்வமான நடவடிக்கை என்பதால், தனிநபர் பெயர்களைக் கொண்ட தாளிலோ அல்லது மனுவுக்குத் தொடர்பில்லாத விவரங்களைச் சேர்ப்பதோ கூடாது. மேல்முறையீட்டு விண்ணப்பம் தலைமை தகவல் ஆணையாளர் அல்லது மாநில தகவல் ஆணையர்கள் பெயருக்கு அனுப்பக் கூடாது. திரும்பப் பெறப்படுவது எப்போது? மேல்முறையீட்டு மனுக்கள் சில காரணங்களுக்காக திரும்பப் பெறப்படலாம். அதன்படி, முதல் கட்டமாக பொதுத் தகவல் அலுவலருக்கோ அல்லது மேல்முறையீட்டு அலுவலருக்கோ மனு அனுப்பப்படாமல் ஆணையத்தில் நேரடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் நிராகரிக்கப்படும். முதல் மேல்முறையீட்டு அலுவலரிடம் இருந்து பதில் வரப் பெற்ற அல்லது வரப் பெற வேண்டிய தேதிக்கு 90 நாள்கள் கழித்துச் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாதவை, மாநில தகவல் ஆணைய வரம்புக்குள் வராத அமைப்புகள், கையெழுத்திடாத, மேல்முறையீடு படிக்கக் கூடிய அல்லது புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.
புதிதாக உறுதிமொழி: இரண்டாம் முறையீட்டில் பல புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட உறுதிமொழிப் படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், "விண்ணப்பதாரராகிய நான் அளித்த விவரங்கள், தகவல்கள் அனைத்தும் எனக்கு நேரடியாகத் தெரிந்தவை. அவை அனைத்தும் நான் அறிந்த வகையில் உண்மை. சரியானவை என்றும் நம்புகிறேன் என இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்' எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே பொருள் குறித்து ஆணையத்திடம் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை என்றும் உறுதியளிப்பதாக அந்தப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வலர்கள் எதிர்ப்பு: புதிய நடைமுறைகளுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளளனர். "தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே மேல்முறையீடு செய்யப்படுகிறது, மனுதாரர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையென உறுதிமொழி அளிப்பதென்றால் எதற்காக மனு செய்ய வேண்டும்' என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment