அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம் பெற்றோரிடம் குறைந்துவிட்டது. அதிக பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவக்கியும், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவது, கல்வித்துறை அலுவலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது
.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சமீப காலமாக, தனியார் பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வியின் மீதான ஆர்வம், பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ஆண்டுக்காண்டு, மாணவர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருகிறது. இதை தடுக்க, கடந்த, 2012-13ம் ஆண்டில், அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, அந்த ஆண்டில், 150 பள்ளிகளில் மட்டும் ஆங்கிலவழிக்கல்வி துவங்கியது. 2013-14ம் ஆண்டில், அது, 5,189 பள்ளிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 1.03 லட்சம் குழந்தைகள், ஆங்கில வழியில் படிப்பதாக அரசு அறிவித்தது.
ஆனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களும், தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஒரே வகுப்பறையில் படிக்கும் நிலை, ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலை, ஆங்கிலவழிக்கல்வி ஏ.பி.எல்., கார்டு வழங்காமை உள்ளிட்டவைகளால், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாத நிலை உள்ளது. ஆங்கிலவழிக்கல்விக்கு தனியாக ஆசிரியர் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த உபரி ஆசிரியர்களால், அது முடியாமல் போனது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி பெரிதாக, பெற்றோரை ஈர்க்கவில்லை. ஆசிரியர்கள், தங்கள் வருகை பதிவேட்டில் மட்டுமே, ஆங்கிலவழிக்கல்வியாக பராமரித்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் மேலும், 3,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி துவக்கப்பட்டும், ஒரு லட்சம் மாணவர்களின் எண்ணிக்கையை தாண்டவில்லை.
ஆங்கிலவழிக்கான ஆசிரியர்களோ, கற்பித்தல் உபகரணங்களோ வழங்காத நிலையில், ஆங்கிலவழியில் மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வியும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
No comments:
Post a Comment