வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- பருவ மழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளிக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் ஆகியன மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது எனவும், இடி, மின்னல் ஆபத்து குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பங்கள், அறுந்து தொங்கும் கம்பங்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், துண்டித்த நிலையில் உள்ள மின்சார கம்பிகள் இல்லாதவாறு தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள், பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை, சுற்றுச்சுவர்கள் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டடப் பணிகள், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லத் தடை விதிக்கவும் பள்ளங்களைச் சுற்றிப் பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தலைமையாசிரியர்களால் எடுக்கப்பட வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment