அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக தமிழ், பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளது. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்டப் பாடங்களில் விண்ணப்பித்தோருக்கான நேர்காணல் முடிந்து இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ், பொருளாதாரம், புவியியல், வணிகவியல், வணிகவியல் (சி.ஏ.), வணிகவியல் (ஐபி), வணிகவியல் (இ-காம்), தொழில் நிர்வாகம் (பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்), தொழில் மேலாண்மை (பிசினஸ் மேனேஜ்மென்ட்), பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், உடற் கல்வி ஆகிய 12 பாடங்களுக்கான நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதங்கள் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து இந்தக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிற பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment