ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து, தொழிலாளர் பி.எப்., கணக்கு எண் பெறும் முறை, நேற்று முதல் துவங்கப்பட்டது. இவ்வசதியை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர், டில்லியில் துவக்கி வைத்தார்.புதிய வசதி குறித்து, அவர் கூறுகையில், ''தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. மத்திய அரசு அமைந்து முதல் 100 நாளில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு, யுனிவர்சல் கணக்கு எண் அளிக்க வேண்டும் என, முடிவு செய்துள்ளோம்.
தொழிலாளர் சேம நல நிதித் துறை இந்த இலக்கை எட்டும்,'' என்றார்.தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் விஷ்ணு டியோ சாய்ஜி பேசுகையில், ''தொழில் நிறுவனங்கள், பி.எப்., கணக்குகளைத் துவங்குவதற்கு, ஆன் லைன் வசதி எளிதானது. மேலும், இதன்மூலம், வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும்,'' என்றார்.வழக்கமாக, பி.எப்., கணக்கு எண்ணை, தொழிலாளி ஒருவருக்குப் பெற, பி.எப்., அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, பி.எப்., எண்ணை ஒதுக்க சில காலம் பிடிக்கும். இந்த கால தாமதம், ஆன் லைன் வசதி மூலம் போக்கப்படுகிறது. பி.எப்., கணக்கைத் துவங்க, ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால், ஒரு நாளில் கணக்கு எண் ஒதுக்கப்படும். மேலும், விண்ணப்பம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், ஆன் லைனில் தெரிந்து கொள்ளலாம்.
பி.எப்., கணக்கு துவங்க நீண்ட நாட்கள் ஆகிறது. அதிகாரிகள் விரைந்து செயல்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இனி இடம் இருக்காது.தொழிலாளர்கள் எளிதாக அணுகும் வகையில், புதிய வசதி இருக்கும் என, தொழிலாளர் நலத்துறை செயலர் கவுரிகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment