தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2,110 ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜேக்) சார்பில் வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,230 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து, அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(வடக்கு) அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஜோசப் முன்னிலை வகித்தார். ஜெயலட்சுமி, மணிகண்டபிரபு, ராஜசேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆசிரியர்களின் ஒட்டுமொத்த விடுப்புக் குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(பொறுப்பு)
யதுநாதனிடம் கேட்டபோது, மாவட்டம் முழுவதும் உள்ள 1,230 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 4,350 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 2,110 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தனர். இருப்பினும், ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைவருக்கும் கல்வித் திட்ட பகுதிநேர ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர்கள் என 395 ஆசிரியர்கள் மூலமாக தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றன. விடுப்பு எடுத்த ஆசிரியர்களுக்கு அன்றைய ஒருநாள் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றார்.
No comments:
Post a Comment