தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது. தனியார் பள்ளி மோகம் ஆங்கிலவழிக்கல்வி என்பது மட்டுமின்றி, மாணவர்கள் மீதான அக்கறையும், அந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதால், கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் கூட, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். கடந்த ஆண்டு, ஆங்கிலவழிக்கல்வி என, அரசு பள்ளியில் தனிப்பிரிவு துவக்கினால், அதில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை, அங்கு கொண்டு வந்து பெற்றோர் சேர்க்கலாம் என, அரசும், கல்வித்துறை அலுவலர்களும் நினைத்திருந்தனர்.
ஆனால், அப்படியெதுவும் நடக்காததால், ஆங்கிலவழிக்கல்விக்கு மவுசு இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில் ஏற்கனவே, தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களை, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றியது. இதை அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் புதிதாக சேர்ந்துள்ளனர் என, பெருமிதமாக அறிவித்தனர். ஆனால், தமிழ்வழி கல்வியில், ? லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்த உண்மையை யாரும் கூற முன்வரவில்லை. பெயரளவில், ஆங்கிலவழி கல்வி என, அறிவித்ததுடன் சரி, அதற்கு பின், அவர்களுக்கான தனி வகுப்புகளோ, பயிற்சிகளோ, ஆசிரியர்களோ வழங்கப்படவில்லை. தவறான கொள்கை தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில், அமர வைத்து, அதே ஆசிரியர் மூலம் வழக்கம் போல், பாடம் நடத்தும் பணி நடந்து வந்தது.
இதனால், அரசு பள்ளிகளின் தரம் குறித்தோ, ஆங்கிலவழிக்கல்வி குறித்தோ, பெற்றோரின் எண்ணத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக்கல்வியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வியில் கூடுதலாக சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த அதே, புள்ளிவிவர, "மேஜிக்' மட்டும் பெருமிதமாக இருக்கலாமே தவிர, மொத்த மாணவர் எண்ணிக்கையில் சரிவு இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாத பெற்றோர் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளியில் சேர்த்தபின், அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியில் கொண்டு வந்து சேர்க்க யாரும் தயாரில்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களின் நடத்தையால், பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர். குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் பெரும்பாலும், மருத்துவ விடுப்பில் இருப்பதும், மற்றொரு ஆசிரியர் பள்ளி நிர்வாகத்துக்கு, அலுவலகத்துக்கு அலைவதும் சரியாக இருக்கிறது. பெரும்பாலான நாளில் ஆசிரியர் இல்லாத நிலை, பல பள்ளிகளில் உள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் ஆங்கில வழி துவக்கினால் மட்டும் எவ்வித முன்னேற்றமும் வந்துவிட போவதில்லை. மாறாக, தற்போது அரசு பள்ளிகளில் மட்டும் இருந்து வரும், தமிழ்வழிக்கல்வி, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment