இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 03, 2012

ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை: அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

  ஆசிரியர் நியமனத்தில் எத்தகைய இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போதுள்ள முறையின்படி, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறையின் கீழ் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றும், தகுதியான பலரும் பணி வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இதில் பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,895 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மற்றும் உத்தேச தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறி தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளில் 50-க்கும் மேற்பட்ட விடைகள் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது. நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக அனைத்து விடைத்தாள்களையும் மறுமதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் புதன்கிழமை கூறியது:

ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் வகையில், முதன்முதலாக, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதை வெளியிடும்போதே அதில் சில பிரச்னைகள் எழலாம் என்றும் எதிர்பார்த்தோம். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஆசிரியர் நியமனம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக அரசு 2009-ல் வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களிலும் 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது (முன்னதாக, இடஒதுக்கீட்டு முறையில் 100 புள்ளி ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு, அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்குவதற்காக 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டது). அரசாணையின்படியே, 200 புள்ளி இடஒதுக்கீட்டு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றியுள்ளது. அதில் உள்ள பிரச்னைகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்தபிறகு, தமிழகம் அரசிடம் இதுகுறித்து விளக்கம் பெறப்படும். அரசாணையில் திருத்தம் கொண்டுவராத வரை இந்த இடஒதுக்கீட்டு முறையை மாற்றுவது மிகவும் கடினமானது.

50 முக்கிய விடைகள் தவறு: முக்கிய விடைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பங்கு எதுவும் இல்லை. அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு முக்கிய விடைகள் முடிவு செய்யப்பட்டு, அவர்களின் கையெழுத்தும் பெறப்படுகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு முக்கிய விடைகளில் தவறு உள்ளதாகக் கூறியுள்ளது. இனிவரும் காலங்களில் முக்கிய விடைகளுக்கு துறை நிபுணர்களையே பொறுப்பேற்கச் செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். விரைவில் மறுமதிப்பீடு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அனைத்து விடைத்தாள்களும் விரைவில் மறுமதிப்பீடு செய்யப்படும். விடைத்தாள்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதால், திருத்தப்பட்ட முக்கிய விடைகளைக் கொண்டு கம்ப்யூட்டரில் மறுமதிப்பீடு செய்யப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் சில நாள்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment