""புதிய விதிமுறைபடி, எம்.பி.பி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதன்படி, எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒரு பாடத்தில் உள்ள, தலா இரண்டு தாள்களை சேர்த்து, குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என்ற நடைமுறைக்கு பதிலாக, எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளில், தனித்தனியாக, 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்தை எதிர்த்து, இந்த ஆண்டும், மருத்துவ மாணவர்கள், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய விதிமுறையின்படி, எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படும் என, தெரிகிறது. இதுகுறித்து, இப்பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்வு விதிமுறைகளை மாற்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் உள்ளது. எனவே, மருத்துவ மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த ஆண்டும், புதிய விதிமுறைபடி, எம்.பி.பி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,' என்றார்.
No comments:
Post a Comment