முன் அறிவிப்பின்றி, விரைவு தபால் கட்டணத்தை, ஐந்து ரூபாய் முதல், 30 ரூபாய் வரை, தபால் துறை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு, வாடிக்கையாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தபால் துறைக்கு, வருவாய் ஈட்டித் தரும் சேவைகளில், "விரைவுத் தபால்' சேவையும் ஒன்று. தனியார் கூரியர் நிறுவனங்கள், புற்றீசல் போல் பெருகினாலும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடிதம் மற்றும் ஆவணங்களை அனுப்ப, தபால் துறையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விரைவுத் தபால் சேவைக்கான கட்டணத்தை, தபால் துறை, பல மடங்கு உயர்த்தியுள்ளது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு, தபால் சேவையை அளிக்க வேண்டிய சூழலில், அதிரடியாகக் கட்டணத்தை உயர்த்தியது வருவாயை இழக்கும் செயல் என, தபால் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதிகரிக்கப்பட்ட கட்டணத்திற்கு, கல்வி மற்றும் சேவை வரியை விதிப்பதால், கட்டண உயர்வு மேலும் அதிகரிக்கிறது.
இது குறித்து, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி கூறியதாவது: பட்டாபிராம் போஸ்ட் ஆபிசிலிருந்து, சென்னை தலைமைச் செயலகத்திற்கு கடிதம் ஒன்றை, விரைவுத் தபாலில் அனுப்பினேன். அந்த கடிதத்தின் எடை, 30 கிராம். மாநகர எல்லைக்குள், 50 கிராம் எடை வரை அனுப்பப்படும் கடிதத்திற்கு, 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடிதத்தை அனுப்ப, 12 ரூபாய் செலுத்தினேன். கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், 17 ரூபாய் கட்டணமாகத் தர வேண்டும் என்று, அங்குள்ள ஊழியர் கூறினார். கட்டண உயர்வு பற்றி, தபால் துறை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இது குறித்து கேட்டால், அக்., 1முதல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்கின்றனர். இவ்வாறு பாலாஜி கூறினார். கட்டண உயர்வு பற்றி தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""விரைவுத் தபாலுக்கான கட்டண உயர்வு அறிவிப்பு, காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது. கட்டண உயர்வு பற்றி, பொதுமக்களுக்கு முன்னரே அறிவித்திருக்க வேண்டும்.
விரைவுத் தபால் மூலம் பொருட்கள் அனுப்ப வரும் வாடிக்கையாளர்களிடம், கட்டணத்தைக் கூடுதலாகக் கேட்டால், தகராறு ஏற்படுகிறது,'' என்கிறார்.
No comments:
Post a Comment