தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில வகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான அரசாணையை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின் அண்மையில் வெளியிட்டார். அதில், சில பிரிவுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில்... சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
உற்பத்தி அல்லது பதனிடுதலில் சிப்பம் கட்டவும் (பேக்கிங்), மூடி முத்திரை இடும் பணிக்காகவும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசுத் துறைகளின் கொள்முதல் உத்தரவைப் பெற்றுள்ள மலர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை மையங்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். பால் மற்றும் பால் பொருள்கள், எண்ணெய், மருந்து மற்றும் மருந்து உபகரணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தத் தடை இல்லை.
பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் போது அவற்றில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட வேண்டும். மேலும், அதில், இந்திய தரச் சான்று 17088: 2088 உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment