தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் பொதுத்தேர்வுகள் முடிந்த உடனே செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான இலவச மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல்கட்டமாக 25 மையங்களும், இதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதி முதல் 100 பயிற்சி மையங்களும் செயல்பட்டன. அவற்றில் சுமார் 14,000 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேலும் 312 மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த 412 மையங்களும் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 72,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக கடந்த வாரங்களில் பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் காரணமாக பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. கடந்த பிப்.24,25 ஆகிய நாள்களில் பெரும்பாலான பயிற்சி மையங்கள் செயல்படவில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இதையடுத்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் தாற்காலிகமாக செயல்படாது. தேர்வுகள் முடிவடைந்த பின்னர் ஏப்.3-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் மே.3-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் சிறப்புப் பயிற்சிகள், கையேடுகள் வழங்கப்படும் என்றனர். நீட்தேர்வு நாடு முழுவதும் மே.6-ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment