அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது; பொது தேர்வுகளில், தரவரிசை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, உதவித் தொகை வழங்கப்படுகிறது; ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, கனவு ஆசிரியர் விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், நற்சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையில், 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும், தினமும் குறைந்த பட்சம், 10 சதவீதம் பேர் விடுப்பு எடுப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கல்வித்துறை ஆய்வில், 15 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே, மிக குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு, வரும், 12ம் தேதி, நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. 'இந்த நற்சான்றிதழ் வழங்குவதால், மற்ற, 4.35 லட்சம் ஆசிரியர்களும், அடுத்த ஆண்டில் நற்சான்றிதழ் பெறுவதற்கான உத்வேகத்தை ஏற்படுத்த முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment