2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக தமிழகத்தில் முதல் கட்டமாக தாலுகா வாரியாக கிராமங்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-2011 காலக்கட்டத்தில் மக்கள் தொகை 15.60 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது. இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேர், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 087 பேர் இருந்தனர். இதில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் இருந்தது. கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 73.45ல் லிருந்து 80.33 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் ெதாடங்கியுள்ளது. அதன்படி, தாலுகா வாரியாக கிராமங்கள், சிறு கிராமங்களின் பட்டியல்கள் சரிபார்த்து வழங்க தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் பிரிவு உயரதிகாரிகள் கூறுகையில், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் கட்ட பணியாக தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக கிராமங்கள், சிறு கிராமங்கள் குறித்த விவரங்கள், புதிதாக பிரிக்கப்பட்ட தாலுகாக்கள் போன்றவற்றை சரிபார்த்து பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடித்த பின்னர் கணக்கெடுப்பில் ஈடுபட தேவையான ஆட்கள், செலவினத்தொகை போன்ற விவரங்களின் அறிக்கை தயாரிக்கப்படும். தொடர்ந்து 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.
No comments:
Post a Comment