1, 9–ம் வகுப்பு மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் பாடபுத்தகத்துக்கான சி.டி.யை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:–
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புத்தகமாக உருவாக்கப்பட வேண்டும்.
முதல்கட்டமாக, 1 மற்றும் 9–ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கில பாடங்கள் அடங்கிய பாடநூல்களின் முதல் பாகம் முழுமையாக முடிக்கப்பட்டு, அதை அச்சிடும் பணிக்காக சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த சி.டி. தற்போது வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனரிடம் அந்த சி.டி. ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. புதிய பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்ற கருத்தை மத்திய அரசு கூறியது. ஆனால் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு 6 மாதக் காலத்திற்குள் பாடத்திட்ட மாற்றும் பணியை மேற்கொண்டு வரலாற்றை படைத்துள்ளது.
பாடத்திட்டத்தின் புத்தக வடிவமைப்பினை சிறப்பான முறையில் உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. விலை உயர்ந்த காகிதத்தில் புத்தகம் உருவாக்கப்பட உள்ளது. பாடப்புத்தகத்தை மாணவர்கள் சுமந்து செல்லக்கூடாது என்ற வகையில் 3 கட்டங்களாக பிரித்து வைத்துள்ளோம்.
12–ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரமும், 10, 11–ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி 30 நிமிடமும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 11–ம் வகுப்பில் ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண் என்பதால், கேள்விகளின் எண்ணிக்கையும் அதற்கு ஏற்றார் போல் குறைக்கப்பட்டுள்ளது.
மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பிரிவில் 26 பாடமும், தொழிற்கல்வியில் 12 பாடமும், 1,6,9 வகுப்பிற்கு 14 பாடம் என சிறுபான்மை மொழி உள்பட மொத்தம் 174 பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. தொழிற்கல்வியில் உள்ள 12 பாடங்கள் என்பது மாணவர்கள் கல்வியை கற்ற உடன் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment