"வெயிட்டேஜ் முறையே தொடரும்" : தமிழக அரசு முடிவு!
-மலையரசு
அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து நடந்த தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்க, பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெயிட்டேஜ் முறையில் பின்தங்கி இருந்ததால், வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்கள், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில், ‛வெயிட்டேஜ் முறை சரியானதுதான். இனி, தமிழக அரசு இதுகுறித்து தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என தமிழக அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசு குழப்பத்தில் இருந்தது. இந்த நிலையில் வெயிட்டேஜ் முறையைத் தொடரவே தற்போது அரசு முடிவுசெய்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ் முறையைத் தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் நியமனம் 'டெட்' முறையிலா அல்லது வெயிட்டேஜ் முறையிலா என்ற குழப்பத்தைத் தற்போது அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி, தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 சதவிகிதம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40 சதவிகித வெயிட்டேஜ் மதிப்பெண்களிலிருந்து கணக்கிடப்படும். டெட் தேர்வில் எடுக்கப்பட்ட 60 மதிப்பெண்களுடன், 12 -ம் வகுப்பிலிருந்து 15 மதிப்பெண்களும், டிப்ளமோவிலிருந்து 25 மதிப்பெண்களும் சேர்த்து, வெயிட்டேஜ் கணக்கிடப்படும்
No comments:
Post a Comment