தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தமிழ், ஆங்கில வழி மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து பயிலும் அவலம் நிலவுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஏறத்தாழ 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் 5760 தொடக்கப்பள்ளிகளும், 450 நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள்தான். இவற்றில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு வகுப்பில் 35 மாணவர்களுக்கு மேல் படித்து வந்தனர். இன்று, ஒரு வகுப்புக்கு 80 பேர் வீதம் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் சென்னை, ஈரோடு, நாகர்கோவில் உட்பட குறிப்பிட்ட நகரங்களை தவிர்த்த பிற நகரங்களில் ஒரு வகுப்புக்கு 10 பேர் என்பதே அதிகபட்சம்தான். இதனால் இத்தகைய பள்ளிகள் இன்று ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகளாக தரம் குறைந்துள்ளன.
இந்நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆங்கிலவழிக்கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 2013ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
இதில் கிராமப்புறங்களில் உள்ள ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளும் அடக்கம். ஆனால், இதுவரை ஆங்கிலவழிக்கல்விக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து, தமிழ் மற்றும் ஆங்கிலவழிக்கல்வி மாணவர்கள் ஒரே வகுப்பில் அமர்ந்து தமிழ் வழியில் நடத்தப்படும் பாடங்களை கற்கும் நிலை உள்ளது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆங்கிலவழி கற்பித்தல் திறன் கொண்ட ஆசிரியர்களை தனியாக நியமிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment