பொது தேர்வுக்கான, தேர்வு அறைகளில், மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2; மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், 10ம் வகுப்புக்கும், பொது தேர்வுகள் துவங்க உள்ளன.
தேர்வின் போது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், ஒரு லட்சம் ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
* உள்ளூர் மின் வாரிய அதிகாரிகளுடன் பேசி, அனைத்து தேர்வு மையங்களுக்கும், தடையில்லா மின் வசதி பெற வேண்டும் * அனைத்து தேர்வறைகளின் முன்புறமும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஓட்டை, உடைசல் பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகளை மாற்றி, மாணவர்களுக்கு வசதியான பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகள் வைக்க வேண்டும் * தேர்வின் போது, மாணவர்களின் காலணிகள், உடைமைகளை வைக்க, தனி அறைகளை ஒதுக்க வேண்டும். * அனைத்து தேர்வறைகளிலும், இயங்கும் நிலையில், மின் விசிறி மற்றும் சுவர் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment