தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். 'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்' என்றும் அவர் கூறினார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
பல சிறிய நாடுகளிலும்கூட, ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்யாமலேயே 9-ஆம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 7-ஆம் வகுப்பு மாணவருக்கு, 4-ஆம் வகுப்பு கணிதத்தைப் போடத் தெரிவதில்லை.
இதை மாற்றி, முறையான, தரமான தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை (போர்டு எக்ஸாம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மே மாத துணைப் பொதுத் தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.
No comments:
Post a Comment