இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 07, 2018

இறுதிக் கட்டத்தில் புதிய பாடத்திட்டப் பணிகள்


புதிய பாடத்திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும் கல்வி ஆண்டுக்கான 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு பாடநூல்கள் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றனர். இந்தக் குழு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களை மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களையும் ஆய்வு செய்தது. மேலும், கூட்டங்கள் நடத்தி பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தது. அதனைத் தொடர்ந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை பாடத் திட்டக் குழு கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பாடத் திட்டம் பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், தபால் வழியாகவும் தங்கள் கருத்துகளை அனுப்பினர். அனைத்து கருத்துகளும் முறையாக தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் பிப்ரவரியில் இந்தப் பணி முடிவடையும் எனவும் பாடத்திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் கூறியது:

பாடத்திட்டம் குறித்து 17 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஏற்புடைய கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் எழுதும் பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற மொழி மாணவர்களுக்காக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளில் பாடங்கள் மொழி பெயர்க்கப்படும். இறுதியாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான 1,6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் பாட நூல்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.

No comments:

Post a Comment