தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நடப்பாண்டு என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வியியல் (பி.எட்,எம்.எட்) கல்லூரிகள், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
சென்னை சைதாப்பேட்டை, சென்னை லேடி வெலிங்டன், நாமக்கல் குமாரபாளையம், வேலூர், நெல்லை, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஒரத்தநாடு உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் திருச்சி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரத்தில் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் புதிதாக கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, தேசிய கல்வியியில் கழகத்தின் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. என்சிடிஇ விதிப்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 12 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20க்கும் குறைவான பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சுமார் 85 சதவீத இடங்கள் காலியாக உள்ள நிலையில், கவுரவ பேராசிரியர்கள் மட்டுமே நீண்டகாலமாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிஎட் படிப்பு காலம் 2 வருடமாக உயர்த்தப்பட்டது. அதன்படி பார்க்கும்போது, பேராசிரியர்களின் எண்ணிக்கையும் இருமடங்காக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, ஒரு கல்லூரியில் கூட நிரந்தர முதல்வர் இல்லை. பேராசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, கல்வி உபகரணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தான் என்சிடிஇ அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், தமிழக கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை புதிய நியமனங்களுக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அரசு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.
No comments:
Post a Comment