GOODS SERVICE TAX (GST)
ஜி.எஸ்.டி மசோதா ஒப்புதல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மக்களவையில் மற்றும் மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேறி இருந்தது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு 17 மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், ஜிஎஸ்டி மசோதாவில் முக்கியமான சவாலே இனிதான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
முக்கிய மசோதா!
ஜிஎஸ்டி மசோதா மிக முக்கியமான மசோதா. இது ஐக்கிய முற்போக்கு அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த மசோதாவை சில காரணங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் பாஜ அரசு வெற்றி பெற்று கடந்த ஆண்டு மே மாதம் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் மக்களவையைப்போல், மாநிலங்களவையில் பாஜ அரசுக்கு பலம் இல்லாததுதான். இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் ஜிஎஸ்டி மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டப் பேரவைகளில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி மசோதாவுக்கு 17 மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த மசோதா சட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
முக்கியமான சவால்!
இந்த நிலையில் ஜிஎஸ்டி மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து சென்னை பல்கலைக் கழகப் பொருளாதாரப் பிரிவு பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம். அவர் "ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலையடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த கவுன்சிலில் மத்திய நிதி அமைச்சர் உட்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கு பெறுவர். ஜிஎஸ்டி மசோதாவில் முக்கியமான சவாலே வரி விகிதங்களை நிர்ணயிப்பதுதான்.
ஏனெனில் வரி விகிதங்கள் அதிகமாக இருந்தால் அது பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்பார்கள். அதேசமயம் குறைவாக இருந்தால் மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்படும். இதனால் மத்திய அரசு அதிக இழப்பீடு வழங்க வேண்டியது இருக்கும். இதுமட்டுமின்றி மாநில அரசுக்கு வருவாய் குறைவாக இருக்கும் பட்சத்தில் மாநில அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலில் நிர்ணயிக்கப்படும் வரி விகிதத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஆகையால் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து வரி விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்களை மாநில நிதி அமைச்சர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஓட்டெடுப்பு மூலம் 50 சதவிகிதத்துக்கும் மேல் ஆதரவு கிடைத்தாலே இந்த மசோதா நடைமுறைக்கு வரும்" என்றார்.
ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலையடுத்து ஒரு வழியாக இந்த மசோதா நடைமுறையில் வர உள்ளது. ஆனால், எப்பொழுது உறுதியாக வரும் என்பதைக் கூற முடியாது என்கின்றனர் நிபுணர்கள். அரசாங்கம் தரப்பில் 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment