அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment