வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இணைய தளத்திலும் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (அதாவது 1.1.1998ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் ‘‘8ஏ’’ யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் வாக்காளர் பதிவு அலுவலர், மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இன்று மற்றும் வருகிற 25ம் தேதி ஆகிய (ஞாயிற்றுக்கிழமை) நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சமர்ப்பிக்கவும் செய்யலாம்.
மேலும், பொதுமக்கள் இணையதளம் (www.elections.tn.gov.in) மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். ஜனநாயகத்தினை வலுப்படுத்த, தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக, வரைவு வாக்காளர் பட்டியலினை பார்வையிட்டும், இன்று மற்றும் 25ம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment